காரி, 2024-04-19, 5:03 PM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

Blog

முகப்பு » 2012 » September » 12 » திராவிட மற்றும் இந்திய தேசிய இயக்க இதழ்களின் வெற்றி தோல்விகள்
6:43 PM
திராவிட மற்றும் இந்திய தேசிய இயக்க இதழ்களின் வெற்றி தோல்விகள்

சாவித்திரி கண்ணன்

திராவிட இயக்க இதழ்கள்

திராவிட இயக்கங்கள் சாதாரண மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை சாத்தியப்படுத்தும் சக்தி கொண்டவைகளாக வெளிவந்தன. மன்னர் ஆட்சி மகாத்மியங்களிலும், நிலப்பிரபுக்களின் அதிகாரவரம்புக்குள்ளும், புராணங்கள் இதிகாசங்கள் தோற்றுவித்த மயக்கங்களிலும் இந்திய தேசபக்த வெறியிலும் உழன்று வந்த தமிழ்ச் சமூகம் திராவிட இயக்கங்களின் தாக்கத்தால் புதிய சமூக சிந்தனைகளைக் பெற்றது.

படிப்பையும் அதன் பலன்களையும் ஒரு குறிப்பிட்ட சமூகமே குத்தகை எடுத்துக் கொண்டாட்டங்களை அனுபவித்து வந்த சூழலை பிரிட்டிஷ் ஆட்சி மாற்றியது. பிராமண சமூகம் தவிர்த்து மற்ற சமூகங்களிலும் படித்தவர்கள், பண்டிதர்கள் உருவாயினர். ஆயினும் மூன்று சதவிகிதத்தினரான பிராமணர்களே பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரமையப் பதவிகளில் 93 சதவிகிதத்தை ஆக்கிரமித்தனர்.

இதன் எதிர்வினையாக திராவிட இயக்கத்தின் முதல் நாளிதழாக 1914இல் வெளிவந்தது "திராவிடன்". திராவிடன் ஏற்றிய தீப்பந்தம் பல தீபங்களை ஒளிவீசச் செய்தது. திராவிட இயக்கத்தின் தாக்கம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிற்றிதழ்களையும் வெகுஜன இதழ்களையும் பிரசவித்தது. 1916இல் நிறுவப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் பிராமணரல்லாதார் இயக்கம் என்ற பெயரில் பேசப்பட்டது. இந்த இயக்கத்தின் சார்பில் "ஜஸ்டிஸ்" என்ற ஆங்கில இதழ் வெளிவந்தது.

இந்த இதழின் பெயரே இவ்வியக்கத்தின் பெயராக "ஜஸ்டிஸ் கட்சி" என்றும் "நீதிக்கட்சி" என்றும நிலைப் பெற்றது.

1925இல் முதன் முதலில் குடிஅரசு பத்திரிகையை இந்திய தேசியத்திற்கான இதழாகக் கொண்டு வந்த பெரியார், காங்கிரசிலிருந்து விலகியபிறகு அதனை திராவிட மக்களுக்கான சுயமரியாதை இதழாக நடத்தினார். வியாபார நோக்கமின்றி கொள்கைக்காக வெளியான குடியரசு இதழ் ஆயிரத்து சொச்சம் சந்தாதாரர்களைப் பெற்று, தொடர்ந்து பொருளாதார சங்கடங்களிலே எட்டாண்டுகள், தின, வார, மாத, இதழ் என மூன்று வடிவங்களில் நடத்தப்பட்டு, அரசு அடக்கு முறையால் நின்றுபோனது.

நீதிக்கட்சியின் திராவிடன் இதழை பொறுத்தவரை அதற்கு நிலப்பிரபுக்கள், தொழிலதிபர்கள் உதவி கிடைத்தது. ஆளும் கட்சி ஆன நிலையில் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் புரவலர்களாக இருந்து வளர்த்தார்கள். இப்படி இலட்சக் கணக்கில் பணத்தை விழுங்கிய நிலையிலும் "திராவிடன்" ஒரு திடகாத்திரமான இதழாக சொந்தக்காலில் நிற்க முடியாத ஒன்றாகவே இருந்தது. நீதிக்கட்சியாரின் வற்புறுத்தலினால் நடுவே சில காலம் பெரியார் இவ்விதழுக்கு பொறுப்பேற்று பல்லாயிரக்கணக்கில் பணம் இழந்தது தான் கண்ட பலனாயிருந்தது. ஆகவே அப்பொறுப்பிலிருந்து அவர் தன்னை விடுவித்துக் கொண்டார்.

இதேபோல திராவிடக் கொள்கைகளுக்கு எதிராக பிராமணர்கள் ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதி அவை அகில இந்திய அளவில் கவனம் பெற்றுவருவதை அறிந்த பெரியார் 1928இல் ரிவோல்ட் (Revolt) என்ற ஆங்கில இதழை ஆரம்பித்தார். அறிவுக் களஞ்சியமாக, புரட்சியின் அம்சமாக வெளியானது ரிவோல்ட். இதில் டாக்டர் முத்து லெட்சுமி, செல்வி குஞ்சிதம், செல்வி ஞானம், செல்வி இந்திராணி போன்ற பெண்கள் எழுத்துலகில் பிரவேசிக்கும் வாய்ப்பு அமைந்தது. இரண்டாண்டு வீச்சுக்குப் பிறகு ரிவோல்ட் நின்றுவிட்டது. மீண்டும் 1933-இல் "புரட்சி" என்ற பெயரில் பெரியார் ஒரு பத்திரிகை தொடங்கினார். கடுமையான அரசாங்க அடக்குமுறையால் ஓராண்டிற்குள்ளேயே மூன்று முறை "புரட்சி" இதழ் முடக்கப்பட்டது. நீதிமன்றம், வழக்கு, ஜாமின் அபராதம் என அலைக்கழிக்கப்பட்ட புரட்சி ஓராண்டு காலத்திலேயே முடிவுக்கு வந்துவிட்டது.

ஒன்றரை அணா விலையில் "பகுத்தறிவு" என்ற பெயரில் பெரியார் கொண்டு வந்த மாத பத்திரிகை "குடி அரசு"ம், "புரட்சி"யும் விட்டுச் சென்ற பணிகளை முன்னிலும் வீரியத்துடன் முன்னெடுத்தது. இதில் அறிஞர் அண்ணா, குத்தூசி குருசாமி போன்றோரின் கட்டுரைகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. நான்கைந்து ஆண்டுகள் பகுத்தறிவு வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இதழ்களின் விற்பனையில் பெரும் அக்கறை காட்டினாலும், விற்பனையை வைத்து இதழ் பணியையோ, எழுத்துப் பணியையோ நிர்ணயித்துக் கொள்ளவில்லை பெரியார். "நான் எழுதியதை நானே அச்சுகோத்து நானே அச்சிட்டு நான் மட்டுமே படித்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டாலும் "குடி அரசை" வெளியீட்டு என் கருத்துக்களை வரும் தலைமுறைக்கு விட்டுச் செல்வது என் கடமை" என பிரகடனப்படுத்தியவர் பெரியார்.

நின்று போன குடிஅரசு இதழை 1935இல் மீண்டும் துவக்கினார் பெரியார். இம்முறை சுமார் 14 ஆண்டு குடியரசு தாக்குபிடித்து கோலோச்சியது. நீதிக்கட்சிக்காரர்களால் ஆரம்பிக்கப்பட்ட "விடுதலை" வாரம் இருமுறை இதழ் 19 மாதங்களுக்குப் பிறகு பெரியார் கைக்கு வந்தது. முதலில் அரையணா விலையில் விற்பனையான விடுதலையை நாளிதழாக மாற்றி காலணா விலைக்குத் தந்தார் பெரியார். சரியாகச் சொல்ல வேண்டுமானால் மூன்று சல்லிக்காசுகள், 1973இல் பெரியார் மறைந்த போது விடுதலை நாளிதழ் விலை 12 காசுகளே.

விடுதலை நாளிதழுக்கு மணியம்மையாரை ஆசிரியராகவும் குத்தூசி குருசாமி அவர்களை பொறுப்பாசிரியராகவும் கொண்டு பெரியார் நடத்தினார். அறிஞர் அண்ணாவும் சில காலம் இதன் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார்.

இக்காலங்களில் விடுதலை சுமார் 44,000 பிரதிகள் விற்பனையைத் தொட்டது. அண்ணா அவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து விலகி தி.மு.க. தொடங்கிய காலத்தில் விற்பனை சரிபாதியாக சரிந்தது. 1958இல் "நாத்திகம்" என்ற பெயரில் வெளியான வார இதழ் பெரியார் கொள்கை விளக்க ஏடாக பெரும் வரவேற்பைப் பெற்றது. இது காங்கிரஸ் ஆட்சியை ஆதரித்தும், தி.மு.க.வை எதிர்த்தும் பரபரப்போடு வெளியாகி சுமார் 75,000 பிரதிகள் வரை விற்பனை வளர்ச்சி அடைந்தது.

1975இல் வே.ஆனைமுத்து அவர்களால் "சிந்தனையாளன்" மாத இதழ் பெரியார் சிந்தனைகளைத் தாங்கி கொண்டு வரப்பட்டது. பெயருக்கு ஏற்றார்போல் தீவிர சிந்தனைத் தளத்தில் செயல்பட்டுவரும் இவ்விதழ் இடையே சில பொருளாதார நெருக்கடிகளால் சிறிது காலம் தடைப்பட்டாலும் இன்றளவும் சுமார் 4,000 பிரதிகளோடு வெளிவந்து கொண்டுள்ளது.

இவை தவிர பெரியார் குரல், பெரியார் சிந்தனை என்று பெரியார் பெயரைத் தாங்கி வந்த வரிசையில் பத்துக்கு மேற்பட்ட பத்திரிகைகள் வெளிவந்துள்ளன. திராவிட அரசு, திராவிட ஏடு போன்று திராவிடத்தை தாங்கி சுமார் முப்பது பத்திரிகைகள் வெளி வந்துள்ளன "தமிழ்" என்ற பெயரை அடியொற்றி தமிழ் அமிழ்தம், தமிழ் இன்பம், தமிழ் உலகம் என்பதாக நூற்றுக்கு மேற்பட்ட இதழ்கள் வந்தன.

கொள்கை சார்ந்து இயக்கங்கள் செயல்பட்ட காலகட்டத்தில் அந்தந்த கொள்கைகளால் "பற்றிக் கொள்ளும் நெருப்பு" போல இருந்த தொண்டர்கள் படையை வழிநடத்த இயக்க இதழ்கள் வெளிவந்தன.

அந்தந்த இயக்க இதழ்களை படிப்பதற்கென்றே கிராமங்கள் தொடங்கி நகரங்கள் வரை கட்சி அமைப்புகள் "மன்றம்", "பாசறை", "படிப்பகம்", "அறிவகம்" போன்ற பெயர்களில் கூரைவேய்ந்த சிறு அறைகளில் இயக்க இதழ்களை வாங்கி வைத்து படித்து விவாதித்தனர்.

இந்த இயக்க இதழ்கள் பற்பல பிரச்சினைகளில் தங்கள் இயக்கத்தின் நிலைபாட்டை தொண்டர்களுக்கு உணர்த்தவும், எதிர்கொள்கை கொண்ட இயக்கத்தவர்களின் குறைபாடுகளை, தவறுகளை சுட்டிக் காட்டவும் பயன்பட்டன. குறிப்பாக எதிர் நிலையிலுள்ள கட்சிகளின் குற்றங்களை, தவறுகளை அம்பலப்படுத்தும் பிரச்சாரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

திராவிட இயக்க இதழ்கள் பெரும்பாலும் அதன் முன்னணி தலைவர்களாலே நடத்தப்பட்டன. அறிஞர் அண்ணா "திராவிட நாடு", "ஹோம்லேண்ட்", "காஞ்சி" போன்ற இதழ்களையும், கலைஞர் கருணாநிதி "முரசொலியையும், பேராசிரியர் க.அன்பழகன் "புதுவாழ்வு" என்ற இதழையும், நாவலர் நெடுஞ்செழியன் "மன்றம்" என்ற இதழையும் சி.பி.சிற்றரசு "தீப்பொறி இதழையும் என்.வி. நடராஜன் "திராவிடர்" இதழையும் கவிஞர் கண்ணதாசன் "தென்றல்" இதழையும் ஒரே காலகட்டத்தில் நடத்தினார்கள். 1959-இல் ஏ.வி.பி. ஆசைத்தம்பி "தனி அரசு" இதழைக் கொண்டுவந்தார்.

தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக வந்த "நம்நாடு" இதழுக்கு முதலில் கலைஞர் அண்ணா ஆசிரியராகவும் பிறகு நெடுஞ்செழியன், சி.பி.சிற்றரசு, இரா.செழியன் போன்றவர்கள் ஆசிரியராகவும் இருந்துள்ளனர்.

தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடாக 1953முதல் 1972வரை தான் நம்நாடு வெளிவந்தது. லாபகரமாக நடத்த முடியாத நிலையில் தொடர்ந்து நஷ்டப்படத் தயாரின்றி நம்நாடு 1972 டிசம்பரில் நின்றுவிட்டது. இந்த நம்நாடு இதழை மீண்டும் வரை இதழாக 1978இல் கருணாநிதி ஆரம்பித்து தி.மு.க.வின் வார ஏடு என அதிகாரபூர்வமாக அறிவித்தார். ஆயினும் வெற்றிகரமாக இதனைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

தி.மு.க. ஆட்சியைப்பிடித்தது. செல்வாக்கை வளர்த்துக் கொண்டது. ஆயினும் அது எந்த கொள்கையைப் பேசி வந்ததோ அதிலிருந்து விலகியது. நீர்த்துப் போனது என்பதற்கு அவ்வியக்கத்தின் இதழியல் தோல்விகளே சாட்சிகளாகின்றன.

இந்நிலையில் 1977இல் திரு.கே.பி. கந்தசாமி "தினகரன்" என்ற பெயரில் தி.மு.க.வை ஆதரிக்கும் ஜனரஞ்சகமான நாளேடு ஒன்றை ஆரம்பித்தார். இந்த பத்திரிகையின் துவக்கவிழாவை கருணாநிதியைக் கொண்டே நடத்தினார். இந்த நாளேட்டில் தி.மு.க. தலைவரின் செய்திக்குப் பெரும் முக்கியத்துவம் தந்ததோடு காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க. தலைவர் எம்.ஜி.ஆர் போன்றவர்களின் அறிக்கைகள், பேட்டிகள் போன்றவற்றையும் கே.பி.கந்தசாமி பிரசுரித்தார். தி.மு.க.வின் ஐம்பெருந்தலைவர்களாலும் கலைஞர் கருணாநிதியாலும் பெற முடியாத வெற்றியை கே.பி.கந்தசாமி பெற்றார். சுமார் மூன்று லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகுமளவுக்கு தினகரன் வீரியத்துடன் வெளியானது. தி.மு.க. ஆதரவு மனப்போக்குள்ளவர்களால் தான் தினகரனுக்கு இந்த வெற்றி கிடைத்தது. கட்சி செய்தியை மட்டுமின்றி "தினத்தந்தி" பாணியில் பொதுவான செய்திகளையும் குறையில்லாமல் படிக்கும் வாய்ப்பு தினகரன் வாசகர்களுக்கு வழங்கப்பட்டதே தினகரனின் வெற்றிக்கு காரணமாகும்.

கலைஞர் கருணாநிதி வல்லமை மிக்க எழுத்தாளராக, பேச்சாளராக, செல்வாக்கான தலைவராக அறியப்பட்ட நிலையிலும், சினிமாவின் செல்வாக்கு அவருக்கு சேர்ந்த போதிலும், திராவிட இயக்க சிந்தனை போக்குள்ள, தொண்டர்களும் திரளாக இருந்த நிலையிலும் முரசொலியை அவரால் இன்றுவரை வெற்றிகரமான இதழாகக் கொண்டுவர முடியவில்லை. இடையே, "பெரும் பொருளாதாரச் சுமை ஏற்பட்டு விட்டது முரசொலியை நிறுத்தப் போகிறேன்" என அவர் ஓர் அறிவிப்பு வெளியிட அதைத் தொடர்ந்து பெரும் நிதியை கட்சிக்காரர்கள் திரட்டித்தந்து முரசொலிக்கு புத்துயிர் தந்தனர். தி.மு.க. ஆட்சியில் முரசொலிக்கு கிடைத்த அரசு விளம்பரங்கள் அவ்விதழை தொய்வில்லாமல் தூக்கி நிறுத்தியது என்று சொல்ல வேண்டும்.

அறிஞர் அண்ணா தொடங்கி நெடுஞ்செழியன், அன்பழகன், சிற்றரசு, என்.வி.நடராஜன் போன்ற பலர் தொடங்கி நடத்திய இதழ்களும் விரல்விட்டு வாசிக்கும் ஆர்வமுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களை வசிகரித்தன.

இவ்விதழ்கள் இரண்டனாவிலிருந்து அதிகபட்சம் நாலணாவரை விற்கப்பட்டன. அந்தக் காலத்தில் மக்களின் வாங்கும் சக்தி குறைவாயிருந்தது. பொதுவாக உணவு, உடை, இருப்பிடம் போன்ற தேவைகளுக்குப் பிறகே மக்கள் அறிவுவளர்ச்சிக்கோ, தகவல்களை தெரிந்து கொள்வதற்கோ செலவிடுகிறார்கள்.

செய்தி பத்திரிகைகள் காசு செலவழித்து வாங்குபவர்களை விடவும் இரவல் பெற்று இலவசமாக படிப்பவர்களே அக்காலத்தில் அதிகமாக இருந்தனர். இதனால் குறைவான பிரதிகள் விற்பனையான நிலையிலும் ஒவ்வொரு இதழையும் ஐந்து முதல் 25 பேர் வரை படித்தனர்.

நீண்ட காலமாக கட்சிப் பத்திரிகையாக முரசொலியை நடத்தி வந்த கருணாநிதியும், முரசொலிமாறனும் கட்சி அல்லாத பத்திரிகையாக ஒரு ஜனரஞ்சகமாக வார இதழாக "குங்குமத்தை" கொண்டுவந்தனர். இந்த இதழுக்கு திராவிட இயக்க கருத்துக்களுக்கு நேர் எதிரிடை கருத்து கொண்ட பிராமண சமூகத்ததவரான சாவியை ஆசிரியராக்கினர். அதோடு வாசிக்கும் பழக்கம் அதிகமுள்ளவர்களைக் கொண்ட பிராமண சமூகத்தவர்களை வாடிக்கையாளர்களாக பெறவேண்டி அதற்கேற்றாற் போன்ற கட்டுரைகள், கதைகள் அதிகமாகப் பிரசுரிக்கப்பட்டன. குங்குமம் தி.மு.க.வின் சாயல் இல்லாத, திராவிட இயக்க படைப்பாளிகளுக்கு வாய்ப்பளிக்காத, பிராமண சமூகத்துப் படைப்பாளிகளுக்குப் பிரதான இடம் தந்த ஒரு வார இதழாக சுமார் ஒன்றரை லட்சம் பிரதிவரை விற்பனையானது. பிறகு அவ்வப்போது அதில் கட்சி அடையாளம் அதிகம் தெரியத் தொடங்கியதைத் தொடர்ந்து மெல்ல, மெல்ல விற்பனை சரிந்து 60,000 பிரதிகள் வந்து நின்றது. தற்போது சன்தொலைக்காட்சியில் சளைக்காமல் விளம்பரம் தந்து, இலவச பொருள்களை இதழோடு இணைத்து தந்து வெளிவந்தாலும் கூட குங்குமம் இதழ் ஆனந்தவிகடனையோ, குமுதத்தையோ விஞ்சமுடியவில்லை. இப்போதும் தி.மு.க.வின் மீது அனுதாப மனப்போக்குள்ளவர்களின் வெகுஜன ரசனைப் போக்கிற்குத் தீனிபோடும் பத்திரிகையாத் தான் குங்குமம் வெளிவந்து கொண்டுள்ளது.

எம்.ஜி.ஆர். இயக்க மற்றும் அ.தி.மு.க. இதழ்கள்

1954இல் எம்.ஜி.ஆருக்கு ரசிகர் மன்றங்கள் அவருடைய விருப்பத்தின்‘ல் அவருடைய ரசிகர்களால் உருவாக்கப்பட்டன. அப்போது தொடங்கி திராவிட இயக்க எழுத்தாளர்களையும் சிந்தனையாளர்களையும் தனக்கான ஆதரவாளர்களாக மாற்றும் முயற்சிகளை எம்.ஜி.ஆர். ஆரம்பித்தார்.

எம்.ஜி.ஆர். செல்வாக்கின் உச்சத்தில் இருந்த 1961இல் "மக்கள் திலகம்" என்ற பெயரில் ஒரு இதழ் வெளியானது. ஆனால் எம்.ஜி.ஆர் படங்களைப் பெருவெற்றி பெற வைத்த அவரது ரசிகர்கள் அவரது பெயரில் வெளியான இதழுக்கு அப்படி ஒன்றும் ஆதரவு தந்துவிடவில்லை. பிறகு "புரட்சி ஏடு எம்.ஜி.ஆர். "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், இதயக்கனி எம்.ஜி.ஆர் போன்ற இதழ்கள் ஏதோ சுமாரான விற்பனையில் வெளியாகின. எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இதழ்கள் எதுவுமே பல்லாயிரக்கணக்கிலோ, லட்சத்தை தொடுமளவோ விற்பனையாகவில்லை. ஆனால் 
"அலை ஓசை" என்ற பெயரில் வேலூர் நாராயணன் அவர்களால் நடத்தப்பட்ட மாலை நாளிதழ் ஒரு தி.மு.க. எதிர்ப்பு இதழாக 30 ஆயிரம் பிரதிகளில் வெளிவந்து கொண்டிருந்தது. அவ்விதழ் எம்.ஜி.ஆர், தி.மு.க.வை விட்டு வெளியேறிய போது எம்.ஜி.ஆரை ஆதரிக்கும் நிலையினை எடுத்தது. ஆனால் அ.தி.மு.க. நாளிதழாக மாறவில்லை.

அலை ஓசை எம்.ஜி.ஆர் தரப்பு நியாயங்களை- எம்.ஜி.ஆரே சிந்திக்காத விதத்தில் - அழகான வாதங்களை அடுக்கி வெளியிட்டது. தி.மு.க. அரசின் முறை கேடுகளை தைரியமாக வெளியிட்டது. அந்நாளில் அலை ஓசை காட்டிய துணிச்சல் இதழியல் தளத்தில் வேறெவரும் காட்டியிராத ஒன்றாகும். இதனால் அலைஓசைக்கு அமோக ஆதரவு பெருகியது. இதழின் விற்பனை சுமார் ஒன்றரை லட்சம் வரை உயர்ந்தது.

அதற்கு மேலும் விற்பனை அனுகூலமிருந்த நிலையில் தொழில்நுட்ப வளர்ச்சி எட்டியிராத அந்த காலகட்டத்தில் அச்சுக் கோத்து எடுத்துச் சென்று அச்சடிக்க வேண்டிய சூழலில் ஒரு லட்சத்து ஐம்பத்தாராயிரம் பிரதிகளுக்கு மேல் அச்சிட முடியவில்லை. தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளுக்கு இருந்த அச்சகவசதி அலைஓசைக்கு அமைந்திருக்குமானால் அது பல லட்சம் பிரதிகள் விற்பனை கண்டிருக்கும்.

12 பைசாவிற்கு விற்பனையான மாலை நாளிதழ் அலைஓசைக்கு அதன் வாசகர்கள் காலையிலேயே கடைக்காரர்களிடம் காசு கொடுத்து பதிவு செய்து அடையாள அட்டை வாங்கிச் செல்லும் பழக்கமெல்லாம் இருந்துள்ளது. இவ்விதழ் கிடைக்காதவர்கள் ரூ.15 கொடுத்து இதனை பிளாக்கில் வாங்கியதாகவும் பேச்சு அடிபடுகிறது. அலை ஓசையிலிருந்து பிரிந்த ஆசிரியர் குழுவினர் டி.ஆர்.ராமசாமி, எம்.சண்முகவேல், சோலை போன்றோர் எம்.ஜி.ஆரை முழுக்க, முழுக்க ஆதரித்து "மக்கள் குரல்" என்ற மாலை நாளிதழை தொடங்கினர்.

அப்போது எம்.ஜி.ஆர் தன் தொண்டர்களிடம் "அலை ஓசை படிக்க வேண்டாம். மக்கள் குரல் படியுங்கள்" என பகிரங்கமாக சொன்னார். ஆனால் எம்.ஜி.ஆரின் பேச்சு அலைஓசையின் விற்பனையில் சுமார் பத்து சதவிகித பாதிப்பையே ஏற்படுத்த முடிந்தது. என்கிறார் மூத்த பத்திரிகையாளர் சின்ன குத்தூசி, முசிறி புத்தன் அவர்களால் நாடோடி மன்னன், மன்றமுரசு போன்ற எம்.ஜி.ஆர். ஆதரவு இதழ்கள் வெளிவந்தன. அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு சாவி கிடைத்தது போல எம்.ஜி.ஆருக்கு மணியன் கிடைத்தார். இவர்கள் இருவரும் ஆனந்த விகடன் ஆசிரியர்களாக இருந்து அந்த வளாகத்திலிருந்து வந்தவர்கள். மணியன் 1978இல் "இதயம் பேசுகிறது" என்ற வார இதழை தொடங்கி அதனை ஒரு வெற்றிகரமான இதழாகக் கொண்டு வந்தார். இதயம் பேசுகிறது முழுக்க, முழுக்க எம்.ஜி.ஆர் ஆதரவு பத்திரிகையாக வெகுஜனதளத்தில் வெற்றி பெற்றது என்றே சொல்லவேண்டும். கருணாநிதியின் "இந்துவிரோத பேச்சுகளாலும், பிராமண எதிர்ப்பு கருத்துகளாலும்" அதிருப்தியுற்றிருந்த படித்த, உயர்மற்றும் நடுத்தரவர்க்கத்து வாசகர்களை நிரந்தரமாக எம்.ஜி.ஆர் வசம் கொண்டு சேர்த்ததில் மணியனுக்கும் அதற்கு அடுத்ததாக துக்ளக் சோவிற்கும் பங்குண்டு.

முதலில் "சோ" எம்.ஜி.ஆரின் அரசியலை அங்கீகரிக்காமல் அவரையும் அவரது அரசில் அறவையும் படுகிண்டல் செய்துவந்தார். ஆனால் 1980இல் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய வெற்றிபெற்று எம்.ஜி.ஆர். அரசை அராஜகமாக கலைத்தபோது எம்.ஜி-ஆரை தீவிரமாக ஆதரிக்கத் தொடங்கினார் சோ.

எழுத்தாளர் வலம்புரிஜானின் வசிகரமான எழுத்தாற்றல் காரணமாக வார இதழான "தாய்" நல்ல வரவேற்பு பெற்றது. மணியனைவிடவும் எம்.ஜி-ஆர் புகழ் பாடுவதில் வல்லவரானாலும் வலம்புரிஜானின் இதழியல் அணுகுமுறைகளும் இலக்கியப் பார்வைகளும் "தாய்"க்கு தனி முத்திரை பெற்றுத் தந்தது.

எழுத்தாளர்கள், படைப்பாளிகள் மட்டுமே ஒரு இதழின் வெற்றிக்கு முழுப் பங்களிப்பு ஆற்றிவிட முடியாது. முறையான நிர்வாகம் இல்லையேல் எவ்வளவு வரவேற்பு பெற்ற இதழும் காலப்போக்கில் காலாவதி ஆகிவிடும் என்பதற்கு "தாய்" மற்றும் ஆசிரியர் சாவியின் "சாவி" போன்ற இதழ்களே உதாரணம்.

1985இல் வலம்புரிஜான் ஆசிரியராக பொறுப்பேற்று "தினச்செய்தி" வெளியானது. 1991இல் திரைச்செல்வி என்று ஜெயலலிதா புகழ்பாட இரா. ரவிசங்கர் என்பவர் கொண்டு வந்த இதழும் வந்த சுவடு தெரியாமல் மறைந்தது.

வலிமையான எழுத்தாற்றலுக்கு பெயர் பெற்ற முரசொலியில் தயாரான அடியார், நீரோட்டம் என்ற பெயரில் நடத்திய நாளிதழ் ஒரு பேசப்பட்ட இதழாக முக்கியத்துவம் பெற்றது. பொருளாதார ரீதியில் இது அடியாருக்கு அனுகூலம் சேர்க்கவில்லை.

"இதயக்கனி" என்ற பெயரில் 1974இல் எம்.ஜி.ஆரின் ரசிகர்களுக்காக தொடங்கப்பட்ட திரை இதழ் நடுநடுவே நின்றுபோய் இப்போதும் எம்.ஜி.ஆரின் திரையுலகப் புகழ்பாடும் இதழாக எஸ்.விஜயன் என்பவரால் மாத இதழாக வந்து கொண்டுள்ளது.

1976இல் எம்.ஜி.ஆர். "அண்ணா" என்ற பெயரில் தன்னையே ஆசிரியராக அறிவித்து ஓர் நாளிதழைக் கொண்டு வந்தார். இதன் வெளியீட்டாளர் அவரது அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி. முதலமைச்சரான பிறகு அண்ணாவின் ஆசிரியராக ராமன் என்பவரும் பிறகு இரவீந்திரன் என்பவரும் பொறுப்பேற்றனர். இந்த இதழ் அ.தி.மு.க.வினரிடம் அப்படி ஒன்றும் வரவேற்பைப் பெற்று விடவில்லை.

எம்.ஜி.ஆர். மறைவிற்குப் பிறகு 1988இல் எழுத்தாளர் பி.சி.கணேசனை ஆசிரியராகக் கொண்டு ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்ட நாளிதழ் "நமது எம்.ஜி.ஆர்." இவ்விதழ் தொடர்ந்து வரமுடியாமல் இடையே சில காலம் நின்று போனது. 2001இல் பாவைச் சந்திரன் என்ற பிரபல இதழாளரை ஆசிரியராகக் கொண்டு நமது டாக்டர் எம்.ஜி.ஆர் என்று பெயர் மாற்றம் பெற்று ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை தொடர்ந்து வந்து கொண்டுள்ளது.

இந்த இதழ் சாதாரணமாக கடைகளில் கிடைப்பதில்லை. அ.தி.மு.க. நிர்வாகிகளிலேயே பலர் இந்த நாளிதழ் படிக்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

எந்த ஒரு கொள்கையோ, தெளிவான பார்வையோ இல்லாமல் ஒரு இயக்கம் வெகுஜனத்தில் வெற்றிபெறலாம். ஆனால் அந்த இயக்கத்தின் பத்திரிகை அதன் தொண்டர்களை கூட வென்றெடுக்க முடியாது என்பதற்கு தி.மு.க., அ.தி.மு.க., வின் அதிகாரபூர்வ நாளேடுகளே சாட்சியாகும்.

இந்திய தேசிய இயக்க இதழ்கள்

இந்தியாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் வருகையும், சுதந்திரத்திற்கான சிந்தனைகளும் பத்திரிகையின் தேவையை மக்களுக்கு உணர்த்தின. குறிப்பாக மகாத்மா காந்தியின் சத்யாக்கிரக, ஒத்துழையாமை இயக்கங்களும், அதற்கு எதிரான ஆங்கிலேய அரசின் அடக்கு முறைகளும் பத்திரிகை படிக்கும் ஆர்வத்தை மக்களிடம் தூண்டின.

பொதுவாக கடவுள், மதம், புராண, இதிகாச சொற்பொழிவுகள், கதாகாலட்சேபம், தெருக்கூத்து, பாய்ஸ் கம்பெனி நாடகங்கள் இவற்றிலே தான் மக்கள் கவனம் குவிந்திருந்தது. வறுமை, பசி, நோய் இவற்றால் உண்டாகும் மரணங்கள், துன்பங்கள்.... போன்ற எல்லாவற்றக்குமே மக்கள் கடவுளிடம் மட்டுமே விடைதேடினார்கள். தாங்கள் பிரிட்டிஷ் ஆட்சியால் அடிமைப் படுத்தப்பட்டிருப்பதை பற்றிய பிரக்ஞை அவர்களுக்கு ஏற்படாததற்குக் காரணம் அவர்கள் ஏற்கெனவே வர்ணாசிரமத்தின் அடிப்படையிலும், ஜமீன்தாரர்கள், மிராசுதார்களுக்குக் கீழேயும் ஓர் அடிமை வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்ததுதான்! இந்தியாவில் பெரும்பாலான மன்னர் ஆட்சி சமஸ்தானங்களும், நிலச்சுவான்தார்களும் ஆங்கிலேயர்களின் அதிகாரத்திற்கு அடிபணிந்து தங்களுக்கு கீழிருக்கும் மக்களை மேன்மேலும் ஆங்கிலேயர்களுக்கும் சேர்த்துச் சுரண்டிக் கொடுமைப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் வெளிநாடு சென்று படித்து வந்த இளந்தலைமுறையினரால் தான் சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம், மக்களாட்சி போன்ற சிந்தனைகள் மெல்ல, மெல்ல துளிர்விட்டன. இந்த சிந்தனைகளை மக்களிடையே பகிர்ந்து கொள்ளும் நோக்கம் தான் இந்தியாவில் இதழியல் துறைக்கான இயக்குசக்தியாக விளங்கிற்று.

இதனால்தான் மக்களை வழி நடத்தும் தலைவர்களாக இருந்த அனைவருமே இதழியலை ஒரு தவிர்க்க முடியாத, அத்தியாவசியமான ஆயுதமாகக் கையிலெடுத்தனர்.

அன்னபெசன்ட் அம்மையார், உ.வே.சு.ஐயர், சே.ப.நரசிம்மலு, மகாத்மா காந்தி, திலகர், ராஜகோபாலச்சாரியார், சுப்பிரமணியசிவா, வ.உ.சிதம்பரனார், திரு.வி.க. மறைமலை அடிகள், ப.ஜீவானந்தம், ம.பொ.சிவஞானம், ஈ.வெ.ராமசாமி..... போன்ற பல தலைவர்கள் பத்திரிகைகளை நடத்தினார்கள். இயக்கங்கள் வளர்வதற்கு இயக்கக் கருத்துகளை மக்களிடையே பரப்புவதற்கு இயக்கத்திலுள்ளோரின் உறவுகளைப் பலப்படுத்துவதற்கு பத்திரிகைகள் பயன்பட்டன. இயக்கத் தலைமைக்கும் தொண்டர்களுக்குமான பலமான பாலமாக பத்திரிகைகள் விளங்கின.

ஆனால் இவ்வித இயக்க பத்திரிகைகளின் வரலாற்றைப் பார்த்தால் 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவை நஷ்டமாகவே நடத்தப்பட்டுள்ளன. இந்த நட்டத்தின் காரணமாக தொடர்ந்து நடத்தவியலாமல் பெரும்பாலானவை நின்று போயுள்ளன. ஆட்சி அதிகார பலம் கைகொடுத்தும் கூட பல பத்திரிகைகள் தொடர்ந்து வரமுடியாமல் தள்ளாடி நின்று போயின. ஆட்சி அதிகாரம், செல்வாக்கு காரணமாக சில பத்திரிகைகள் தொடர்ந்து லாபமில்லாவிட்டாலும் அல்லது வாசகர் பலம் இல்லாவிட்டாலும் இன்றும் நடத்தப்படுகின்றன.

தமிழ்நாட்டில் ஜி.சுப்பிரமணிய ஐயரால் நடத்தப்பட்ட "சுதேசமித்திரன்" தான் முதன் முதல் காங்கிரஸ் என்ற கட்சியை - படித்தவர்கள் மட்டுமே அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டால் போதும் என் நினைத்திருந்த கட்சியை - பாமர மக்களிடம் கொண்டு சேர்த்து காங்கிரஸ் கட்சியில் சராசரி மக்களையும் சங்கமிக்க வைத்தது. எவ்வளவு சிறப்பாக வெளிவந்த போதிலும் சுமார் ஆயிரத்து சொச்சம் பிரதிகள் வரை மட்டுமே விற்பனை கொண்ட சுதேசமித்திரன் தொடர்ந்து வரஇயலாமல் துவண்டுபோனது.

பாரதியார் என்ற அக்னிகுஞ்சு சுமார் 18 ஆண்டுகாலம் இதழியல் துறைக்குத் தன்னையே அர்ப்பணித்து, அளப்பரிய பங்களிப்புகள் தந்தபோதிலும், பொருளாதார ரீதியில் இதழியல் பணிகள் பாரதியாருக்கு லாபத்தை குவிக்கவில்லை.

தன் முழு ஆற்றலையும் அர்ப்பணித்து பாரதியார் நடத்திய "இந்தியா" பத்திரிகை வாயிலாகத்தான் அவர் கவிதைகள் பட்டி தொட்டியெங்கும் பரவின. ஆயினும் ஆயிரம் பிரதிகள் என்ற இலக்கையே அடைய முடிந்தது.

பாரதியார் காலத்திற்குப் பிறகு தான் மகாத்மாகாந்தியின் வெகுஜனப் போராட்டங்கள் வீரியம் பெற்றன. உப்புச் சத்தியாகிரக போராட்டமும். இரண்டாம் உலகப்போரும் தான் பத்திரிகைகளின் விற்பனையை அதிகப்படுத்தின.

காந்தியின் தீண்டாமை ஒழிப்பு, கதர் இயக்கம், மது ஒழிப்பு போராட்டங்கள் மக்களிடையே பரவவும், வரவேற்புப் பெறவும் வெற்றிபெறவும் பத்திரிகைகளே பெரிதும் பங்காற்றின.

விடுதலைப் போராட்டத்தின் போது சுதந்திரத்திற்கான லட்சியங்கள் இதழியலின் இயங்கு சக்தியாயின. இதில் அதிகபட்ச வெற்றியை ஈட்டிய பத்திரிகை "சுதந்திர சங்கு" (1930-38). இது ஒரு லட்சம் பிரதிகள் விற்பனையைத் தொட்ட முதல் தமிழ்ப் பத்திரிகையாகும். எனினும் லட்சியத்தில் காட்டிய தீவிரத்தை பத்திரிகை நிர்வாகத்தில் சிறிதும் காட்டாததாலும் பத்திரிகையில் வந்த லாபமனைத்தையும் சற்றும் முன் யோசனையின்றி சுதந்திர போராட்டத்திற்கே அர்ப்பணித்துவிட்டதாலும் பத்திரிகை ஒரு கட்டத்தில் நிற்க வேண்டியதாயிற்று.

திராவிட இயக்கங்களுக்கு எதிரான கருத்துகளை பலப்படுத்தும் நோக்கத்தோடு நடத்தப்பட்ட "தேசபக்தன்" நாளேட்டிற்கு ஆசிரியர் பொறுப்பேற்றவர் திரு.வி.க.வே சொந்தமாக நடத்திய இதழ் "நவசத்தி". 21 ஆண்டுகள் இவ்விதழை ஓரளவு பாதிப்பில்லாமல் பக்குவமாக கொண்டுவந்த திரு.வி.க. அதற்குப் பிறகு இராசாமணி அம்மையாரிடம் ஒப்படைத்துவிட்டார். திரு.வி.க.வின் தேசபக்தனில் தயாரானவர்களே வெ.சாமிநாதசருமாவும், கல்கியும். தேசபக்தனின் எழுத்து நடைக்கும், கட்டுப்பாடுகளுக்கும் ஒத்த வராமலே கல்கி அதிலிருந்து வெளியேறினார். சமஸ்கிருதக் கலப்பும் ஆங்கிலக் கலப்பும் மிகுந்திருந்த அன்றைய ஊடகங்களுக்கு ஒரு மாற்று ஊடகமாக நவசக்தி திகழ்ந்தது. டாக்டர் பி.வரதாராஜூலுவின் "தமிழ்நாடு" முதலில் வார இதழாக வெளியாகி பிறகு வெற்றிகரமான நாளிதழாக பரிமாணம் பெற்றது. காங்கிரஸ் கொள்கைகளை தீவிரமாக ஆதரித்த இவ்விதழ் அரசாங்கதோடு தீவிரமான மோதல் போக்கை கொண்டதால் பல சிரமங்களுக்கு ஆளானது.

இந்நிலையில் டாக்டர் பி.வரதராஜூலு காங்கிரசில் பிராமண ஆதிக்கம் நிலவுவதாகக் குமுறி காங்கிரசிலிருந்து விலகி காங்கிரசை விமர்சிக்கத் தொடங்கினார். இதனால் இதழின் விற்பனையில் பலமான சரிவு ஏற்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தனக்கென்று ஒரு நாளிதழ் வேண்டுமென்று கருதியது. இதற்காக அன்றைய காங்கிரஸ் ஆந்திரகேசரி பிரகாசம் "சுயராஜ்யா" என்ற இதழை வ.ரா.சுத்தானந்தபாரதியார், எம்.எஸ்.சுப்பிரமணியம் ஆகியோரை ஆசிரியர் குழுவில் நியமித்து வெளிக்கொண்டு வந்தார்.

இவ்வளவு சிறப்பான ஆசிரியர் குழு இருந்த நிலையிலும் அன்றைய காங்கிரசில் நிலவிய கோஷ்டிபூசல்கள் மற்றும் நிர்வாகத் தவறுகள் காரணமாக சுயராஜ்யா தொடர்ந்து வெளிவரவில்லை. பேனா மன்னர் என புகழப்பட்டவர் டி.எஸ்.சொக்கலிங்கம். தீவிர தேசபக்தர். "காந்தி" (1931) என்ற பெயரில் காலணா விலையில் இவர் ஒரு இதழ் கொண்டு வந்தார். இவ்விதழ் பெரிதும் பேசப்பட்டது ஆயினும் தொடர்ந்து நடத்த முடியவில்லை. அவர் தினமணி ஆசிரியராகி தினமணிக்குப் புகழ்சேர்த்தார்.

தினமணி நிர்வாகத்துடன் கருத்து வேறுபட்டு வெளியேறி இவர் "தினசரி" என்ற நாளிதழ் (1944) தொடங்கினார். புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, சி.சு.செல்லப்பா போன்றவர்களை துணை ஆசிரியர்களாகக் கொண்டு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் காமராசர் தீவிரமாக ஆதரித்த தினசரி மிகச் சிறப்பான நாளிதழாகப் பேசப்பட்ட போதிலும் பொருளாதார ரீதியில் வெற்றிகாண முடியாமல் நின்றுவிட்டது.

இராம்நாத் கோயங்காவால் நடத்தப்படட தினமணி சுதந்திரப் போராட்டத்தை ஆதரித்த நாளிதழ். ஆயினும் அரசங்கத்தை தீவிரமாக பகைத்துக் கொள்ளாமல், நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, சிறந்த நிர்வாக ஆளுமையுடன் செயல்பட்டதால் தொடர்ந்து தொய்வில்லாமல் வந்தது.

டி.எஸ்.சொக்கலிங்கம் போன்ற பத்திரிகை உலக ஜாம்பவான்கள் தினமணி ஆசிரியர் குழுவிலிருந்த முக்கியமானவர்களோடு வெளியேறிய நிலையிலும் தினமணி சமாளித்துவிட்டது. சொக்கலிங்கத்தால் உருவாக்கப்பட்ட ஏ.என்.சிவராமன் தினமணியை தூக்கி நிறுத்திவிட்டார். எழுத்தாளர் கல்கி ஆனந்தி விகடனில் அச்சாணியாக கருதப்பட்டவர். அவர் விகடனில் எஸ்.எஸ்.வாசனுடன் கருத்து வேறுபட்டு வெளியேறினார். ஆயினும் சிறந்த நிர்வாகியான எஸ்.எஸ்.வாசன் ஆனந்த விகடனை எந்த சேதாரமும் இல்லாமல் மேன்மேலும் வெற்றிகரமான இதழாகக் கொண்டுவந்தார்.

கல்கி அவர்கள் சதாசிவத்துடன் இணைந்து ராஜாஜி ஆதரவுடன் "கல்கி" வார இதழ் தொடங்கினார். கல்கி எழுத்துப் பணியையும், சதாசிவம் நிர்வாகப்பணியுமென பிரித்துக் கொண்டனர். கல்கி இதழ் நின்று நிலைத்துவிட்டது. ஆனால் பெரிய வெற்றியைப் பெறவில்லை. இன்றுவரை சுமார் 40,000 பிரதிகளோடு வெளிவந்து கொண்டிருக்கிறது.

கவியரசு கண்ணதாசன் தி.மு.க. விலிருந்து வெளியேறி காங்கிரசில் இருந்த நேரம் "கடிதம்" என்ற நாளிதழை சிறிதுகாலம் நடத்தினார். காங்கிரஸ் கட்சியில் "நவசக்தி" என்ற பெயரில் இயக்க இதழ் நடத்தப்படட்து. காமராசர் காங்கரஸ் தலைவராக இருந்த கால கட்டத்தில் பெரும் தொண்டர் படையுடனும், ஜெயகாந்தன், பி.சி.கணேசன், சின்னக்குத்தூசி போன்ற எழுத்தாளர்கள் பலத்துடனும் பரபரப்பாக இவ்விதழ் வெளிவந்தது. தி.மு.க.விற்கும் சவால்விடும் அனல்பறக்கும் செய்தி, விமர்சனக்கட்டுரைகள், இதில் வெளியாயின. எனினும் சுமார் 30,000 பிரதிகளே நவசக்தி விற்பனை கண்டது. தொடர்ந்து லாபகரமாக இதை நடத்தமுடியவில்லை. நாத்திகம் ராமசாமி அவர்களை நவசக்தியை நடத்தும்படி கூட காமராஜர் கேட்டுப் பார்த்தாரம். நாத்திகம் இராமசாமி நவசக்தி ஆசிரியர் குழுவோடு தனக்கு ஒத்துப்போகாது என்று மறுத்துவிட்டாராம்.

1980களின் இறுதியில் மூப்பனாரும், ப.சிதம்பரமும் ஜெயகாந்தனை ஆசிரியராக்கி தினசரியைக் கொண்டுவந்தனர். இந்த இதழும் மிக சுமாரான வரவேற்பைத்தான் பெற்றது. இறுதியில் இதில் பணியாற்றியவர்களுக்கு கூட சம்பளம் தரவழியில்லாமல் நிறுத்தப்பட்டு விட்டது.

1990களின் இறுதியின் மீண்டும் நவசக்தியை வார இதழாக வெளிக்கொண்டு வந்தார் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கோபண்ணா. அப்போதும் இதன் விற்பனையை ஐயாயிரம் பிரதிகளுக்குமேல் அதிகரிக்க முடியவில்லை! இப்படியாகக் பலமான இயக்கங்களாயிருந்தாலும் பிரபலமான எழுத்தாளர்களாயிருந்தாலும் அவை இதழியல் விற்பனைக்கு பெரிய பங்களிப்பு ஆற்றிவிட இயலாது என்பதே யதார்த்தமான உண்மையாகவுள்ளது.

வெகுஜனமக்களின் ரசனையை, மனப்போக்குகளை அனுமானிக்கத் தெரிந்த ஆசிரியர் தலைமையுக், உறுதியான நிர்வாக பலமும் சேர்ந்து அமையும் போதுதான் இதழியலின் வெற்றி பிரகாசமடைகிறது. இந்த இரண்டில் எந்த ஒன்று பலவீனமென்றாலும் வெற்றி கேள்விக்குறியே!

நன்றி: தமிழர் கண்ணோட்டம்

Attachments: Image 1
பார்வைகள்: 609 | Added by: magickousi | Rating: 0.0/0
Total comments: 0
Name *:
Email *:
Code *:
உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்