அறிவன், 2025-01-22, 5:21 AM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

தமிழ் ஒருங்குகுறி (UNICODE)யில் ஊடுருவும் கிரந்தம்

உலகமொழிகளுள் மூத்த மொழியாகவும் முதன்மொழியாகவும் மூல மொழியாகவும் செம்மொழித் திறங்கள் அனைத்தும் பெற்ற மொழியாகவும் உள்ளது தென்தமிழ்மொழியாகும். உயர்தனிச் செம்மொழி என உயர்தமிழ் ஆராய்ச்சியாளரால் உண்மை கண்டறியப்பட்டு உலகுக்கு உரைக்கப்பட்டது; உணர்த்தப்பட்டது.
அயல்நாட்டவர், மொழியாராய்ச்சி அறிஞர் கால்டுவெல், பரிதிமாற்கலைஞரெனத் தம் பெயரை மாற்றியமைத்துக்கொண்ட வி.கோ. சூரியநாராயண சாத்திரியார் இவ்விருவரும் தமிழை உயர்தனிச் செம்மொழியென உறுதி கூறினர்.
கால்டுவெல்லார்க்குக் கிட்டிய நூல்கள் நன்னூலும் பின்னூல்களுமேயாகும். அவற்றைக்கொண்டே தமிழினது தனித்தன்மையைக் கண்டறிந்து "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண” நூலை எழுதினார். தொல்லிலக்கண நூல் தொல்காப்பியம் அவர்க்குக் கிட்டியிருக்குமானால் இன்னும் சிறந்த கொள்கை முடிவுகளைத் தமிழைப்பற்றித் தந்திருப்பார்.
பரிதிமாற்கலைஞர் தனித்தமிழ் விதை ஊன்றினார். செடியாக வளர்த்தவர் தனித்தமிழ்த்தந்தை மறைமலையடிகளாரும் அவர்தம் மகள் நீலாம்பிகை அம்மையாரும் ஆவர். பெரும் தோட்டமாக்கித் தமிழியக்கமாகத் தழைப்பித்தவர் தகுதிமிகு மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர். தென்மொழி உயிர்வேலியிட்டவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்க்குத் துணை நின்றவர்கள், இன்றும் தனித்தமிழ் நெறி மாறாதிருப்பவர்கள் புலவர் இறைக்குருவனார், பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா, முதுமுனைவர் இரா. இளங்குமரனார், ‘தமிழம்’ பன்னீர் போன்ற ஓரிருவரைத்தான் குறிப்பிட்டேன். பெரும்படையினர் உளர். விரிவஞ்சி விடுத்தேன். எம்போன்றோர் தனித்தமிழ் இயக்கம் மேற்கொண்டு தனித்தமிழ்த் தோட்டப் பண்ணையில் பிறமொழி விலங்குகள் முரித்து உட்புகுந்து அழித்திடா வண்ணம் காக்கும் காவலராக உள்ளனர். தனித்தமிழில் இசைத்தமிழைப் பரப்பியவர் முனைவர் இரா. திருமுருகனாவார்.
மறைமலையடிகளார் வழி நின்று "குறள் வழி”யாய் தமிழ்க்காப்பு அளித்தவர் பேராசிரியர் சி. இலக்குவனார்.
அரசியல் கட்சி நடத்தும் தலைவர்களுள் இலக்கிய இலக்கணப் புலமையும் பிறமொழிக் கலப்பின்றி எழுதும் வல்லமையும் வாய்க்கப்பெற்றவர் அய்யா ஆனைமுத்து அவர்களைத் தலையாயவர்களாகக் கொள்ளலாம். தோழர் தியாகும், தோழர் பெ. மணியரசனும் தனித்தமிழில் எழுதும் ஆற்றலாளர். மேற்காணும் செய்திகளை இங்கு நினைவுகூரவேண்டிய கட்டாயம் என்எனில் தனித்தமிழ் இயக்க வரலாறு அறியாதார்க்கும் வாய்க்கு வந்தவாறு வாயுரைத்தலும் கைக்கு வந்தவாறு எழுதலும் உடையார்க்கும் நடப்புண்மையை நன்கு உரைக்கவேயாம்.
ஆரியர் அரண்மனைக்குள்ளும் அரசாட்சியிலும் அமர்ந்ததும் அவர்தம் சமற்கிருதத்தைத் தமிழில் கலக்கத் தலைப்பட்டனர். வடமொழிக்கலப்பைத் தடுத்துநிறுத்தக் காப்பரண் கட்டியவர் அல்கா விழுப்பஞ்சேர் ஒல்காப் பெரும் புகழ்த் தொல்காப்பியர் ஆவார்.
தொல்காப்பிய எச்சவியலில் வடசொல்லைத் தமிழில் எவ்வாறு எடுத்தாள்வது என்பதுபற்றி இரண்டு நூற்பாக்களில் அவர் வரையறை கூறியுள்ளார். அவற்றைக் கண்ணுறுக:
வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே!
இந்நூற்பாவுக்கு உரையெழுதிய இளம்பூரணர் "வடசொற்கிளவி என்று சொல்லப்படுவன ஆரியத்துக்கு உரிய எழுத்தினை ஒரீஇ இருதிறத்தார்க்கும் பொது வாய எழுத்தினை உறுப்பாக உடையவாகும் சொல்” என்றார்.
(ஒரீஇ - நீக்கி, இருதிறத்தார்க்கும்-வடமொழி, தென்மொழி(தமிழ்)யர்க்கும்)
தெய்வச்சிலையார் என்னும் உரையாசிரியர், "வடசொல்லாகிய சொல்லாவது வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கித் தமிழ்மொழிக்குரிய எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்”. என உரை விளக்கினார். (புணர்ந்த-சேர்ந்த)
சேனாவரையர் "சிறப்பெழுத்தினீங்கி இருசார் மொழிக்கும் பொதுவாகிய எழுத்தானியன்ற சொல்லாம்” என்றெழுதிய உரை நோக்கத்தக்கது. (இருசார் மொழி - தமிழ்மொழி, வடமொழி)
முப்பெரும் உரையாசியன்மார், "ஆரியத்துக்கே யுரிய எழுத்தினை ஒரீஇ (நீக்கி)” என்றும், "வடமொழிக்கேயுரியவாகிய எழுத்தை நீக்கி”, என்றும், "வடசொற்கே உரியவெனப்படுஞ் சிறப் பெழுத்தின் நீங்கி” என்றும் கூறியுள்ளனரே யொழிய, அவ் வெழுத்துகளை (அவ்வாறே - அப்படியே எடுத்தாளச் சொல்லவில்லை. மாறாக இரு மொழிக்கும் பொதுவான எழுத்தால் சொல்லை ஆக்கிக்கொள்ளல் வேண்டும் என்றுரைத்துள்ளனர்.
நம்மிடையே தமிழரெனப்படுவோர் வட எழுத்துகளைத் தமிழ் வழக்கிற்கேற்ப மாற்றாமல் அப்படியே தமிழ் எழுத்துகளுடன் கலந்து எழுதல் வேண்டும் என்றுரைக்கத் தலைப்பட்டுளளனர். அவர் கூற்றுச் சந்தனத்துடன் மலத்தைக் கலந்து தட்டேந்தி வழங்கல்போலாகும்.
பசுமோதி பசு மரணம் (இறப்பு). இப்படிப் பகடி செய்கிறது தினமணி ஆசிரியவுரை. பஸ் மோதி என்று எழுத வேண்டுமாம். பஸ்-பேருந்து என்ற சொல் நடைமுறைக்கு வந்து ஆண்டுபல ஆயின. பஸ் ஸ்டாண்டு - பேருந்து நிலையமாகிவிட்டது. செயலலிதா என்றாலும் ஜெயலலிதா என்றாலும்-ஒருவரைத்தானே குறிக்கும்.
"தமிழோசை” நாளேடு நல்லதொரு தமிழில் புதிய புதிய சொல்லாக்கங்களுடன் வெளிவருகிறது. மொழிநடை ஆசிரியராக இருந்துகொண்டு நல்ல தமிழ் வெளிவர உதவிக்கொண்டிருக்கிறார் இந்தக் கட்டுரையாளர். இரயில்வே ஸ்டேஷன்-தொடர்வண்டி நிலையமாகியிருக்கிறது. ரௌடி- போக்கிலி, புல்டோசர்-சமனி, ஆட்டோ ரிக்ஷா-தானி, கார்-மகிழுந்து, வேன்-மூடுந்து, சம்பவம்-நிகழ்வு. சம்பவ இடத்தில் - நிகழ்விடத்தில், ஆலோசனைக் கூட்டம்-கலந்தாய்வுக் கூட்டம். (தினமணியும் கலந்தாய்வு என்றே எழுதுகிறது வரவேற்கத்தக்கது.) மக்கள் தொலைக்காட்சிச் செய்தியைக் காண்பவர் தீயவிப்பு என்பதைக் கேட்கலாம் இச்சொற்களை தீயணைப்பு - தீயவிப்பு. தீயை எவராவது அணைத்துக்கொள்வார்களா? எனவேதான் தீயவிப்பு என்னும் பொருத்தமான சொல்லைத் தமிழோசை எழுதுகிறது.
பொக்லைன் - இடித்து அள்ளி; அவகாசம்- காலக்கெடு, காலநீட்டிப்பு, ஜாமின் - பிணை, கோர்ட் - வழக்கு மன்றம், வழக்காடு மன்றம், ஆஜர்-நேர் நிறுத்தல், முன்நிறுத்தல்; ஆர்ஜிதப்படுத்தல்-கையகப்படுத்தல், ஆக்கிரமிப்பு-வன்கைப்பற்றல் இவை போன்ற பன்னூறு சொற்களைப் பயன்படுத்துகிறது.
எழுத்தாளர்களும், நாளேடுகளும் இதழ்களும் இச்சொல்லாக்கங்களை எடுத்தாண்டால் தமிழ் கலப்பின்றி வளரும். செம்மொழி இன்னுஞ் சிறக்கும்.
ஸ, ஷ,க்ஷ, ஜ,ஹ அல்ல சிக்கல் (பிரச்சினை) என்கிறார்கள். இவை தமிழிற் கலக்கக்கூடாது என்பதற்காகத்தான் தொல்காப்பியரும் நன்னூலாரும் காப்பரண் (இலக்கண விதி) வகுத்துத் தந்தனர்.
சமணர் கை ஓங்கியிருந்த காலத்தில் கிரந்த எழுத்துக் கலப்புத் தலையெடுக்கத் தொடங்கியது. வைணவ இலக்கியங்கட்கு உரை எழுதியவர் வட எழுத்துகளைக் கலந்து எழுதினர். ஈட்டுரை எனப் பெயரிட்டனர். தமிழும் வடமொழியும் கலந்த சொற்றொடரை மணிப்பவழ நடை என்றனர்.
இப்போக்குகட்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பவணந்தி முனிவர். தாம் இயற்றிய நன்னூலில் பதவியலில் வடமொழியாக்கம்பற்றிக் கூறியுள்ளார்; வரையறுத்துள்ளார்.
ஆரிய மொழிக்கு உயிரெழுத்து 16; மெய்யெழுத்து 37. உயிரெழுத்துகளுள் 6 ஆரியத்துக்குச் சிறப்பெழுத்துகள். அவை : ரு, ரூ, ளு, ளூ, () அம், அஃஅ மீதியுள்ள 10ம் இருமொழிக்கும் பொது. மெய்யெழுத்து முப்பத்தேழனுள் இருபத்திரண்டு ஆரியத்துக்குச் சிறப்பெழுத்துகள். 15 எழுத்துகள் இருமொழிக்கும் பொதுவானவை.ஆரிய உயிரெழுத்துகளை அச்சு, சுரம் என்பர். மெய்யெழுத்துகளை அல், வியஞ்சனம் என்பர்.
இருமொழிக்கும் பொது எழுத்தாலாகி மாற்றமின்றித் தமிழில் வழங்கும் வடமொழியைத் தற்சமம் என்பர்.
எ-டு: அமலம், கமலம், குங்குமம்.
பொதுவும் சிறப்புமாகிய இரண்டு எழுத்துகளும் கலந்து திரிந்து வந்து, தமிழில் வழங்கும். வடமொழியைத் தற்பவம் என்பர்.
தொல்காப்பியர் பொதுவாக ஆரிய எழுத்துகளைத் தமிழ் இயல்புக்கு மாற்றியமைத்துக்கொள்க எனக் கூறினாரேயொழிய, இந்த இந்த எழுத்துகளுக்கு இந்த இந்த எழுத்துகளைச் சேர்த்து வடமொழியாக்குக என்று சொல்லவில்லை.
நன்னூலார் தெளிவாக விரிவாக வரையறை தந்துள்ளார். ஷ-ச,ட; ஷண்முகன் - சண்முகன், விஷம் - விடம், ஜெபம்-செபம், பங்கஜம்-பங்கயம், ரிஷபம்-இடபம் என்று எடுத்துக்காட்டியுள்ளார். இன்னும் விரிக்கின் பெருகும்.
"கம்பன் என்றொரு மானுடன்” என்று சிந்துக்குத் தந்தை பாரதியார் மானுஷ்யன், மனுஷன் என்று பாடவில்லை. ‘ஷ’ வர வேண்டிய இடத்தில் டகரத்தைப் பயன்படுத்திக் கிரந்த எழுத்துத் தமிழில் கலந்து விடாமல் காத்துள்ளதைக் கருத்தூன்றுக.
கல்வியிற் சிறந்த கம்பர் தாம் இயற்றிய இராமகாதையில் லக்ஷ்மணன் என்றெழுதாமல் இலக்குவன் என்றெழுதினார் விபீஷணன் - வீடணன், ரத்தாக்க்ஷன் - குருதிக் கண்ணன், ஸீதா - சீதை என்றெழுதி மொழிக்காப்பில் முனைந்திருந்ததை நினைத்துப் பார்க்க வேண்டும்.
நம் முன்னோர் எவ்வளவு விழிப்பாகப் பிற மொழிக்கலப்புக்குத் தடையிட்டுள்ளனர் என்பது கருதத் தக்கது; கவனத்தில் இருத்தத் தக்கது.
பின்னோராகிய நமக்கு எவ்வளவு பொறுப்பு உள்ளது மொழிக்காப்பில் என்பதை உணர்ந்து செயலாற்றல் வேண்டும். உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யவும், தமிழ் பரவும்வகை செய்யவும் தமிழ் பயன்பாட்டுக்கான எழுத்துரு அமைப்பது வரவேற்கத் தக்கது. தக்கதெனினும் தமிழ்மொழிக்குத் தகாத உருவமைப்புகளால் தமிழ் தாழும்; தமிழ் அழியும் எனின் அவ்வுருவுகளை அகற்ற அரும்பாடுபடல் அறிவுடைமையாகும்.
உலகத்துள்ளோர் அனைவரும் தமிழை அறிந்து கொள்ளப் பயன்படும் வகையில் உருவாக்கப்பெற்ற மென்பொருள் வடிவம்-ட்டேசை (Tamil all Character
Encoding - 16.) (TACE) பயன்படுத்தத் தமிழ்நாட்டரசு இசைவு தந்திருந்தது. இசைவை நிறுத்தி வைக்குமாறு நடுவணரசினரின் சேதித் தொழில்நுட்பத் துறைக்குத் தமிழ்நாட்டு முதல்வர் மடல் வரைந்துள்ளார். இதுவரை அத்துறைக்குத் தமிழரே அமைச்சராக இருந்தார் என்பதை எண்ண எரிகிறது நெஞ்சம்.
முன்னரே தமிழிற் கலந்துள்ள வடமொழி எழுத்துகளைக் களையவே கடும் பாடுபட்டுக்கொண்டிருக்கும்போது, இன்னும் 26 கிரந்த எழுத்துகளைத் தமிழ் எழுத்துகளுடன் சேர்க்க வேண்டும் என்று காஞ்சி சங்கர மடத்தைச் சேர்ந்த இரமணசர்மா ஒருங்குகுறிக் கூட்டிணைப்புக்கு (Unicode Consortium)ப் பல பக்கங்களில் மடல் அனுப்பியுள்ளார். இந்தக் கூட்டிணைப்பு உலக மொழிகளுக்கெல்லாம் வடிவங்களை உருவாக்கிக் கொடுத்துக் கணினியில் எந்தத் தடையுமின்றிப் பயன்படுத்திக் கொள்ள உதவும் அமைப்பாகும்.
தமிழ்நாட்டில் அமையும் அரசுகள் அருமைத் தமிழ்மீது அக்கறைகொள்ளாமல் அயல்மொழியைப் பக்கத்தில் இருத்திப் பாதுகாப்பதால் தமிழ்மொழியைத் தகவிலார் தக்க நேரத்தில் தகவழிக்கத் தலைப்படுகிறார்கள். கண்டவரெல்லாம் கண்டுநிகர் மொழியைக் கொண்டது கோணலெனக் கூறுகின்றனர். கூறித் தமிழ் எழுத்துகளை மாற்ற வேண்டுமென்கின்றனர். இன்றைய தேவை, எழுத்துச் சீர்திருத்தம் அன்று. தமிழ்வழிக் கல்வி - முதல்நிலை தொடங்கி முடிவுநிலை முடிய (பள்ளி முதல் பல்கலைக்கழகம் முடிய) இன்றைக்குக் கட்டாயத் தேவை.
கணினி அறிவுடையாருடன் மொழிநூலில் துறைபோய அறிஞன்மார் இரா. மதிவாணன், பேராசிரியர் கு. அரசேந்திரன், ப. அருளி போன்றோரையும்-இலக்கிய இலக்கணங்கள் முற்றுணர்ந்த பேராசிரியர் செ.வை. சண்முகனார், முனைவர் பொற்கோ, தமிழண்ணல், இளங்குமரனார், ம.இலெ. தங்கப்பா, இறைக்குருவனார், பேரா. தெய்வசுந்தரன் போன்றோரையும் இன்னும் பலர் உளர்-அவர்களையும் சேர்த்து முழு அதிகாரமுள்ள மொழிக்காப்புக்குழு தமிழ்நாட்டரசு அமைத்தல் வேண்டும். இக்குழு அளிக்கும் பரிந்துரைகளை அரசு நடைமுறைப்படுத்தத் தயங்கக்கூடாது; தவறக்கூடாது.
காவிரியாற்றுச் சிக்கலிலும் முல்லைப் பெரியாறு, பாலாறு இவற்றில் அணைகட்டும் அண்டை நாடுகளின் அடாவடிச் செயலுக்கும் இடங்கொடுப்பதுபோல் மொழிக்காப்பில் இருந்துவிடக் கூடாது. ஒருங்குகுறிச் சிக்கலில் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்த முதல்வருக்குப் பாராட்டுகள்.
தமிழ்மொழிக்கே உரிய சிறப்பெழுத்துகளாக உள்ள எ, ஒ, ழ, ற, ன, என்னும் ஐந்து எழுத்துகளையும் கிரந்த எழுத்துகளுடன் சேர்க்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது. சேர்த்தால் தமிழது தனித்தன்மை ஒழிந்துபோம்.
இவ்வைந்து எழுத்துகள் தமிழில் மட்டும் இருத்தலைப் பொறுத்துக்கொள்ள முடியாத ஈசான தேசிகர் (இலக்கணக்கொத்துரை ஆசிரியர்) தம் நூற்பாயிரத்தில்
"அன்றியும் தமிழ்நூற்கு அளவிலை யவற்றுள்
 ஒன்றே யாயினும் தனித்தமி ழுண்டோ
 அன்றியும் ஐந்தெழுத் தாலொரு பாடையென்(று)
 அறையவும் நாணுவர் அறிவுடை யோரே....
என்றெழுதித் தம் வயிற்றெரிச்சலை வெளிப்படுத்தியவரின் (இவர் வடமொழி இலக்கணத்தைத் தமிழில் கலந்தவர்) இக் "கூற்றுகள் அறிவுடையோரால் ஒதுக்கற்பாலன வாகின்றன. தமிழ்மொழியும் வேறே; வடமொழியும் வேறே; இதன்கண் ஐயப்பாடு எள்ளளவும் இல்லை;” என்று பரிதிமாற்கலைஞர் தம் தமிழ்மொழியின் வரலாறு - வடமொழிக் கலப்பு என்னும் உட்பிரிவில் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சி. இலக்குவனார் எழுதிய தொல்காப்பிய ஆங்கில மொழிபெயர்ப்பு நூலுக்கு அணிந்துரை அளித்த கருமுத்துத் தியாகராச செட்டியார், "ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ, என்பவற்றை அப்படியே எழுதுவது தொல்காப்பிய இலக்கணத்துக்கு எதிரானது. எ, ஒ, ழ, ற, ன என்னும் உயிர்க்குறிலும், உயிர்மெய்களும் சமற்கிருதத்தில் இல்லை. எனவே, 3000 ஆண்டுகளாக வாழ்மொழியாக உள்ள மிகவும் தொன்மை வாய்ந்த மொழிஉருவைச் சீர்குலைக்காமல் தேவநாகரி எழுத்தில் எழுதுவது முற்றிலும் முடியாததாகும். தமிழ், சமற்கிருதத்திலிருந்து வேறுபட்ட மொழிக் குடும்பமாகும். வேறுபட்ட இரண்டு மொழிகளை ஒட்டவைப்பது தேவயைற்றது” என்கிறார்.
திரு. கருமுத்துத் தியாகராசர் ஆங்கிலத்தில் அளித்த அணிந்துரையது ஒரு பகுதியைக் கீழே காண்க:
Tholkappiar sanctions borrowing words from Sanskrit/ but strictly prohibits using Sanskrit letters. So the Letters ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ generally used in Tamil now are against the rules of Grammar. This being so, the wholesale use of Devanagari letters for Tamil is inconceivable. Sanskrit language has no short vowels எ,ஒ (e.&o) nor consonants like ழ, ற, ன. So it will be absolutely impossible to write Tamil in Devanagari script without severely disfiguring and mutilating an ancient and living language, founded on scientific basis and existing for over 3000 years without undergoing much
change. Tamil is altogether of a different family from Sanskrit. It is needless to emphasise that grafting of two different species is not possible”” என்று 1964இலேயே தம் கருத்தை எழுதியுள்ளார். 
(கருமுத்துத் தியாகராசர் ‘தமிழ்நாடு’ என்னும் நல்ல தமிழ் நாளேடு வெளியிட்டவர். இலங்கைப் பெரும்புலவர் கைலாசப்பிள்ளை அவர்களிடமும் சோழவந்தான் இலக்கணப் பெரும்புலவர் அரசஞ் சண்முகனாரிடமும் 1914-17களில் தொல்காப்பியம் பயின்றவர்.)
 சமற்கிருத க, ச, ட, த, ப என்னும் எழுத்துகள் ஒவ்வொன்றும் நான்கு ஒலி வேறுபாடுகள் கொண்டு இயங்குகின்றன. தமிழ் எழுத்துகள் சொற்களில் அமையும்இடம் நோக்கி ஓர் எழுத்தே வலிந்தும் மெலிந்தும் ஒலித்தே ஒலிநுட்பங்களை வெளிப்படுத்தும். காண்க : தொங்கல், பக்கல், பாகம், காகம், வண்டு, வட்டு, காற்று, கான்று இவற்றைப் பலுக்கி (உச்சரித்து) வரும் ஒலி வேறுபாட்டை உணர்க.
பேராசிரியர் முனைவர் சி. இலக்குவனார் தொல்காப்பியத்தை அரிதின் முயன்று ஆங்கிலத்தில் பெயர்த்துள்ள திறன் போற்றத்தக்கது. தொல்காப்பியத்தில் நுண்மாண் நுழைபுலவர் மிக்கவர் என்பதால் பொருளறிந்து மொழிபெயர்த்துள்ளார்.
The words of Northern Language (Vadasol) become fit to be used in Tamil when they adopt the Tamil phonetics discarding their northern ones. 
வடசொற்கிளவி  -    The words of Northern Language (Vadasol)
வடவெழுத்து ஓரீஇ   -    discarding their northern ones
எழுத்தொடுபுணர்ந்த    -    adopt the Tamil phonetics
சொல்லாகும்மே -    become fit to be used in Tamil
அடுத்த நூற்பா :
சிதைந்தன வரினும்   -    Even if they become deformed in usage
இயைந்தன -    to suit the Tamil Phonetices
வரையார்  -    they are not excluded, எனவும் மொழி பெயர்த்திருத்தல் கண்டு கழிபேருவகை கொண்டேன். மூலச் சொற்களின் உட்பொருளறிந்து மொழிபெயர்த்துள்ள திறனை எச்சொல்லால் ஏத்துவது!
தொல்காப்பிய உரையாசிரியர்களுள் நச்சினார்க்கினியர் "வட சொற்கிளவி” என்னும் நூற்பாவுக்கு "வடசொல்லாகிய சொல் உரப்பியும் எடுத்தும் கனைத்துங் கூறும் வடவெழுத்துகளின் நீங்கி” என்று உரை வகுத்ததிலிருந்து, வட எழுத்துகளின் ஒலி தமிழ் எழுத்துகளில் வேறுபட்ட ஒலி என்பதை உணரலாம். "உந்தி முதலா முந்துவளி” என்று தொல்காப்பியர் தமிழ் எழுத்துகளின் பிறப்பிடத்தைக் கொப்பூழாகக் கொண்டுள்ளார்.
வட எழுத்துகளை - உச்சரித்தால் வடசொற்களைப் பலுக்கினால் கொப்பூழ்க் கீழிருந்து உள்ளெழுந்து மேனோக்கி ஒலி வருதலை அறியலாம்.
இஷ்டம், காக்ஷி போன்ற சொற்களைக் கொப்பூழின் கீழ்க் கையை வைத்து ஒலித்துப் பாருங்கள். வேறுபாடு தெரியும்.
எவ்வகையிலும் தமிழோடு ஒத்துப்போகாத வடமொழியை, வட எழுத்துக்களை - கிரந்தங்களை ஒருங்குகுறி என்ற பெயரில் சேர்த்துத் தமிழ் அழிப்பில் ஈடுபடுவதைத் தமிழறிஞர்கள், தமிழுணர்வாளர்கள் ஒத்திணைந்து ஒரே குரலில் எதிர்ப்பதைக் கடமையாகக் கொள்ளல் வேண்டும்.
தமிழ்நாட்டரசு தமிழில் கிரந்தம் நுழைவதை முற்றாகத் தடுத்து நிறுத்த முழுமுனைப்பில் ஈடுபடல் வேண்டும்.
"கெடலெங்கே தமிழின்நலம் அங்கெல்லாம்
 தலையிட்டுக் கிளர்ச்சி செய்க”   
- புரட்சிப் பாவலர் பாரதிதாசன்.

உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்