காரி, 2024-04-19, 11:18 AM
நல்வரவு Guest | RSS

வணக்கம்....வாழிய தமிழ் மொழி வாழிய தமிழினம்.

தமிழுக்குத் தொண்டு செய்தோர்

யோகன் பாரிஸ் (JOHAN-PARIS) PARIS, FRANCE:- எம் தமிழும் இத்தாலிய மத குருவும் - எம் தமிழுக்குத் தொண்டு செய்த தமிழ்ச் சான்றோர் பலர்..இவர்கள் தவிர மேல்நாட்டறிஞர்களும் தமிழின் தொன்மையாலும்;இனிமையாலும் கவரப்பட்டு; இலக்கியப்பணி புரிந்து;தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார்கள்.இவர்கள் அனைவர்களிடையேயும் அந்நிய நாட்டில் பிறந்து;வளர்ந்து; படித்து தமிழின் செழுமையைக் கேள்விப்பட்டு,தமிழகம் வந்து தமிழைக் கற்று ;தமிழ்ப்
 பண்பாட்டை அறிந்து;தமிழராக வாழ்ந்து பெருமை சேர்த்தவர் "வீரமாமுனிவர்" எனப் பட்டம் பெற்ற பெஸ்க்கிப் (BESKI) பாதிரியார் எனும் இத்தாலிய கத்தோலிக்க மதகுரு.

4 நூற்றாண்டுகளுக்கு முன் கிருஸ்தவப் பாதிரியாராக ;தமிழகம் வந்த பெஸ்க்கிப் பாதிரியார்; தமிழ்பால் ஈர்க்கப்பட்டு தமிழுக்கும்;தமிழருக்கும் அரிய சேவையாற்றினார். 23 நூல்களைத் தமிழில் எழுதியதுடன் ;இயேசுக் கிறிஸ்துவின் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப "தேம்பாவணி" என்ற பெருங்காவியமாக இயற்றியது; இவர் தமிழ்ப் புலமைக்குச் சான்றாக உள்ளது.

இத்தாலியில் உள்ள காஸ்திலியோனே எனும் கிராமத்தில் 1680; நவம்பர் 8 ம் திகதி பிறந்த இவருக்குப் இயற்பெயர் ஜோசப் கான்ஸ்டன்ட் பெஸ்கி (BESKI). இளமையிலே மிகுந்த அறிவுடையவரான ;இவர் முறையான பள்ளிக் கல்வியில்லாமலே இத்தாலிய மொழியை தவறின்றிப் பேச எழுதக் கற்றுக்கொண்டார். இவர் திறன் கண்டு ஆசிரியர்களே வியந்தனர்.

இளமையிலே எளிய வாழ்வை விரும்பிய இவர்; இறையுணர்வு
மிக்கவராக இருந்து; 18 வயதில் ஜேசு சபையில் சேர்ந்தார்.உலக மொழிகள் கற்கும் ஆர்வத்தால் 30 வயதினுள்; கிரேக்கம்;லத்தீன்;போத்துக்கீச;பிரன்சிய;ஜேர்மன்;ஆங்கிலம்; ஈரானிய மொழியுட்பட 9 மொழிகளில் தேர்ச்சியுடையவராகி அறிஞர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

ஜேசு சபையில் இருந்ததால் அபாரமான பேச்சாற்றல் மிக்கவராகவிருந்து; தன் அறிவு மற்றவர்களுக்குப் பயன்பட வேண்டுமென்பதால் 5 வருடங்கள் இலக்கண ஆசிரியராகக் கடமைபுரிந்து; அதிலும் திருப்தியின்றி 4 ஆண்டுகள் கிருஸ்தவ வேதாகமத்தைக் கற்று மதகுருவாக திருநிலைப் படுத்தப்பட்டார்.

வியாபார நோக்கில் பொன்;மணி; கனி,கிழங்கு தேடிவந்த ஐரோப்பியர்;இந்தியா இவற்றுடன் கலையும்,பண்பும்;அறிவும் மலிந்த தேசம் என்ற கருத்தைப் பரப்பினர். "கலை மலிந்த பாரதமென்பது"இத்தாலியரைக் கவர்ந்தது; குறிப்பாக மொழி; கலை ஆர்வமிக்க பொஸ்கிப் பாதிரியாரைக் கவர்ந்ததால்பாரதம் வந்து இவற்றை அறிய வேண்டுமெனத் தீர்மானித்தார்.

இவர் அறிவு ஐரோப்பியர்களுக்குப் பயன்படவேண்டுமென பெற்றோரும்;மதகுருமாரும் விரும்பிப் பட்டங்கள் பதவிகள் கொடுக்க முற்பட்டபோதும்;அவரோ இந்தியக் கலையார்வத்தால் லிஸ்பனில் இருந்துபுறப்பட்டு 1710 யூனில் கோவா வந்து சேர்ந்தார். அந்த நாட்களில் கோவா வெளிநாட்டு வணிகர்கலுடன்; இந்திய மாநில வணிகர்களும் நிறையுமிடமாக இருந்தது.

சில நாட்கள் கோவாவில் தங்கியவர்;எத்தனையோ விதமான இந்திய மக்கள் மொழி,உடை;உணவு என்பவற்றைக் கவனித்து;அவற்றின் வேறுபாடுகளை உற்று நோக்கி; ஒன்றிலிருந்து மற்றதற்கு உள்ளதொடர்பை பல்மொழிப் புலவரான இவர் இலகுவில் உணர்ந்தார்.திராவிட நாகரீகம் ;கலை; பண்பு என்பவற்றையும் புரிந்துகொண்டு; தமிழ்நாடு செல்ல உத்தேசித்து;கோவாவின் சந்தடி மிக்க வணிகச் சூழலிலிருந்து விடுபட ;கொச்சி வந்து அங்கிருந்து கால்நடையாக "அம்பலக்காடு" ஜேசு ஆலயம் வந்து தங்கி; மதுரையில் காமநாயக்கன்பட்டி வந்து சேர்ந்தார்.

தமிழகம் வந்தவர்; தனக்குச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது போலும்; இம் மண் தெய்வீகம் நிறைந்த மண்ணெனவும் உணர்ந்ததுடன்..;தமிழகம் ஒற்றுமையின்மை;அமைதியின்மை;ஏழைகளுக்குத் தகுந்த கல்வி;சுகாதாரமின்மை போன்ற பல இன்னல்களுடன்; மன்னர்கள் பதவிப்பித்தும்;போட்டி பொறாமையும் கண்டு இவ்வவலங்கள் தீரச் சேவை செய்யத் தீர்மானித்து மொழியைப் பேசப் பழக மக்களோடு மக்களாக வாழவேண்டுமெனத் தீர்மானித்தார்.


அதிஸ்டவசமாக சுப்பிரதீபக் கவிராயரின் நட்பேற்படவே;அதுவே இவர் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்தது. அவரிடம் இலக்கண;இலக்கியம் கற்று; கவி புனைந்து; அல்லும் பகலும் தமிழ்நயத்தில் மூழ்கி; இறைவனை எண்ணவும்;வணங்கவும் ஏற்றது தமிழ்;பக்தியும்;கனிவும் தமிழின் சிறப்புக்கள் எனக் கூறினார்.பன்மொழிப் வித்தகர் பெஸ்க்கிப் பாதிரியார்.

இலக்கியப் பேருரைகள் நடத்துமளவுக்குப் புலமை பெற்றவர். இலக்கியச் சுவடிகளைப் பல இடங்கள் சென்று தேடி எடுத்ததால்; "சுவடி தேடும் சாமியார்" எனவும் அழைக்கப்பட்டார். தமிழின் சிறப்பை மேல் நாட்டார் உணர திருக்குறள்;தேவாரம்; திருப்புகழ்;நன்நூல்;ஆத்திசூடி போன்ற நூல்களை பிற ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார்.தமிழ் கற்க ஏதுவாக தமிழ்- லத்தீன் அகராதியை உருவாக்கினார்.அதில் 1000தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது.பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போத்துக்கீய அகராதியை உருவாக்கினார். பிற மொழிகளைக் கற்று தாய் மொழியில்லாத மொழிகளுக்கு உறவுப் பாலமமைத்தவர் இவர்.

சுவடிகளுக்குப் புள்ளி வைக்காமலே முன்னாளில் எழுதுவது வழக்கம்.புள்ளிக்குப் ஈடாக நீண்ட கோடிருக்கும்.மேலும் குறில்; நெடில் விளக்க (அ:அர, எ:எர) என்று "ர" போடுவது வழக்கம்."ஆ" என எழுத 2 எழுத்துக்கள் வழக்கிலிருந்தது.இந்த நிலையை மாற்றி "ஆ,ஏ" என மாறுதல் செய்தவர்.தமிழ் இலக்கிய; இலக்கணங்கள் பண்டிதநடைக் கவிதையாக இருந்தது. மக்கள் அனுபவிக்க முடியவில்லை என்பதனை அறிந்து வசன நடையாக மாற்றியவர்.

1728 ல் ;பாண்டிச்சேரியில் "பரமார்த்த குரு" என்ற நூல் முதல்முறையாக இவரால் அச்சிட்டு வெளியிடப்பட்டது."அதிவிவேகபூரண குருவுக்கு மட்டி;மடையன்;பேதை;மிலேச்சன்;மூடன் என்ற ஐந்து சீடர்கள், "ஆறு தூங்குகிறதா? விழிக்கிறதா? என்று பார்ப்பதும் "குதிரை முட்டை வாங்கச் செல்வதும்" சிரிப்பூட்டும் கதைகள், இந்தக் நகைச்சுவைக் கதைகள் Jean de la Fontaine (1621-1695) எனும் பிரன்சியரால் எழுதப்பட்டது. ஐரோப்பாவில் பிரபலமாக இருந்ததை பெஸ்கி தமிழிலும் மொழிபெயர்த்தார். பரமார்த்த குருவின் குதிரையை வர்ணித்து இவர் எழுதிய கவிதை இதோ!

"முன்னே கடிவாளம் மூன்று பேர் தொட்டிளுக்க

பின்னிருந் திரண்டுபேர் தள்ள - எந்நேரம்

வேதம் போம் வாயான் விகடராமன் குதிரை

மாதம் போம் காதம் வழி"...

இக்கதையில் மிளிர்ந்த நகைச்சுவை, மக்களைக் பெருதும் கவர்ந்ததால் ;தெலுங்கு;மலையாளம்;கன்னடம்போன்ற தென்னக மொழிகளிலும் வெளிவந்தது.

1738 ல் "தொன்நூல்" என்ற இலக்கண நூலை எழுதியவர்; இதை லத்தீனிலும் வெளியிட்டார்.தமிழ் இலக்கணம் கற்றதால், பண்டைய "நிகண்டுகளை" வரிசைப்படுத்தி, மேல்நாட்டு முறையை மேற்கொண்டு"சதுரகராதி" இயற்றினார்.கற்றவரேயன்றி மற்றவரும் தமிழ்ப்பதங்களுக்கு எளிதான விளக்கம் காணமேல்நாட்டு அகராதித் தொகுப்பே சிறந்ததெனக் கருதிய இவர்.சதுரகராதி என்ற அரியநூலை வெளியிட்டு தமிழகராதியின் தந்தையானார். பெயர்; பொருள்; தொகை; தொடை என்ற நான்கு பிரிவு கொண்டுள்ள "சதுரகராதியில்" ஒவ்வொரு பொருளுக்கும் பல கோணங்களிலிருந்து; விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும்நெடில்;கீழெதுகை;தொடைப்பதம்,அனுபந்த் அகராதி என்ற உட்பிரிவுகளும் இதில் இடம் பெற்றுள்ளன.

தமிழாராச்சி மகாநாட்டின் சிற்பியும், பல உலகச் சுற்றுப் பயணங்களைச் செய்து பண்பாட்டு நெறிகளை அறிந்தவரும், ஈழத்தின் தமிழறியருமான தனிநாயகம் அடிகளார்..."தமிழ் உரை நடைக்கு வளர்ப்புத் தந்தையாகிய பெஸ்கி முனிவர், தமிழ் அகராதியாக்கியதன் மூலம் தமிழகராதியின் தந்தையாகிவிட்டார்.இவரியற்றிய "சதுரகராதி" தமிழகராதிகளுள் முதன்மையானது. இவரது "தொன்நூல்" இலக்கண நூல்களிலே சிறப்புடையது. "தேம்பாவணி"யைப் படைத்ததன் மூலம் திருத்தக்க தேவர்;கம்பர்;இளங்கோவடிகள் போன்ற கவிச்சக்கரவர்த்திகளின் வரிசையில் இடம் பிடித்துவிட்டார். தேம்பாவணியை மத நோக்குடன் பார்க்காமல் தமிழ் நோக்குடன் பார்த்தால் ,இலக்கிய நயங்களைப் புரிந்து மகிழலாம்.பிற நாட்டு இலக்கியக்கருத்துகளைத் தமிழில், வாசமிகு மலர்களாகக் கோர்த்து, கதம்பமாக இணைத்தளித்துள்ளார்.அந்தக் கருத்துக்களைத் தமிழ்ப்பண்புக்கும், கலையுணர்வுக்கும் நகசு செய்து ஒளியேற்றியிருக்கிறார்." என்றார்.

"தேம்பாவணி" ஜேசு நாதரின் வளர்ப்புத் தந்தையாகிய சூசை நாதரின் வரலாற்றை விரித்துரைக்கும் காவியம்; 36 படலங்களாலும்; 3615 விருத்தப் பாக்களாலும் ஆன கிருஸ்தவ வரலாற்று நூலான இது; தமிழ்ப்பண்பாடும், மரபும் கொண்ட காவியமாகத் திகழ்கிறது.ஜேசுவும்; மேரியும்;சூசை நாதரும் ஊரை விட்டே விரட்டப் பட்டபோது மக்கள் தவிக்கிறார்கள். அவர்களைக் காணாது கலங்கும் மக்கள் மனநிலையை வர்ணிக்கும் முனிவர்....

"மயில்காள் அளிகாள் வரிகாள் சிவல்காள்

குயில்கள் கிளிகாள் கொடிகாள் உரையீர்!

எயில்காள் வனத்தினை யெஞ்சருநலோர்

வெயில் காள மறைந் தென மே விடமே!"

[மயில்களையும்,பல்வகை வண்டுகளையும்;கிளிகளையும் பார்த்துக் கலங்கும் மக்கள் கேட்கிறார்கள்;மேகத்துள் மறையும் சூரியனைப் போல் மறைந்த மூவர் இருக்குமிடத்தைச் கூற மாட்டீர்களா?] 

"வரையீர் புனலே மழையீர் வரையே!

விரையீர் அமநாவிரி பூந்தடமே!

கரையீர் மலர்த் கொட சூழ் பொழிலே!

யுரையீர் உயிரின்னுயிருள்ளொளியே!

[மலையை ஈர்த்து விழும் புனலையும்; மேகத்தையீர்த்து மழையாகத் தரும் மலைகளையும்புன்னை முதல் குளிர் பூமரங்கள் சூழ் சோலையே!எம் உயிரிலும் இனியவர்களாகிய மூவர் இருக்குமிடம்சொல்லமாட்டீர்களா?]

இயற்கையை வர்ணிக்கும் இதுபோல் பல பாடல்கள் "தேம்பாவணி" யின் சிறப்புக்கு எடுத்துக்காட்டு.
காணாமல் போன இயேசு பிரான் காட்சி தருகிறார். அந்த ஆனந்தத்தை வர்ணிக்கும் பாடல்...

"தண்டமிழ் சொல்லுநூலும் சால்பொடு கடந்த வண்ணத்
துண்டமிழ்த் துவப்பினுள்ளத் தோங்குமிவ் விருவர் தம்முட்
பண்டமிழுரைத்ததே போற் பயன்பகர்ந்திளபற்காண

மண்டமிழ் துரும வாவின் மகிழ்வினையுரைப் பாரோ!

[வீணையில் எழும் நாதத்தைப் பார்க்கினும் இனிமை மிக்க தமிழ்ச் சொற்களை உச்சரிக்கக் கேட்கும் போதுஎத்தகைய பேரானந்த முண்டாகுமோ!, அதற்குமதிகமான மகிழ்ச்சியை ஜேசுவைக் கண்டதும் மக்கள் கொண்டனர்.என்பது பாடலின் கருத்து.]

'தேம்பாவணி' மதுரைத் தமிழ்ச்சங்கத்தில் பலத்த எதிர்புகளுக்கிடையில் அரங்கேற்றப்பட்டது.பல புலவர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்குச் சளைக்காமல் பதிலளித்த இவரை; தமிழ்ப் புலவர்கள்;"எல்லாம் தெரியுமெனக் கூறும்; பெஸ்கி அவர்களே! வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கிறது; எனக் கூற முடியுமா?என நையாண்டியாகக் கேட்டார்கள். பதட்டமின்றி "முப்பது மூன்று கோடி;முப்பதிமூன்று லட்டத்து;முப்பதிமூவாயிரத்து;முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திரங்கள்; சந்தேகமிருந்தால் எண்ணிப்பாருங்கள் என்றதும்,சபையில் சிரிப்பொலி எழும்பிப்;பலர் முனிவரைப் பாராட்டினார்கள்.
"தேம்பாவணி"யின் சிறப்பைப் பாராட்டி மதுரைத் தமிழ்ச்சங்கம்; பெஸ்கிப் பாதிரியாருக்கு "வீரமா முனிவர்" என்ற பட்டம் அளித்து; ராஜரிஷி என்றும் சிறப்பித்தது.

பின், தஞ்சையில் காவிரிக்கரையில் ஏலாக்குறிஞ்சியில் மாதா கோவிலொன்று நிறுவினார். போர்க் காலத்தில் மக்கள் தஞ்சமடைந்ததால் "அடைக்கல மாதா" எனக் கூறப்பட்டார். அந்த மாதாமேல் "அடைக்கல மாலை" எனும் நூல் புனைந்தார்.மதுரையில் பல காலம் வாழ்ந்த வீரமா முனிவரை; மன்னர்கள் அனைவரும் பெருமைப்படுத்தினார்கள்.

ஒரு தடவை புதுக் கோட்டை போர்க்களமானபோது; சந்தாசாகிப்பின் படைகளைப் பற்றி தளபதியிடமே! நேருக்கு நேர் வாக்குவன்மையுடன் நியாயம் கேட்டபோது;தளபதி சேனாதிபதியைச் சந்திக்க ஏற்பாடு செய்தார்.அந்த இடைவெளியில் உருது மொழி பேசப் பழகி சேனாதிபதியுடன் உருதில் பேசினார். முனிவரது புலமையை மெச்சிய சேனாதிபதி;அந்நாளில் 12;000 ஆண்டு வருமானம் வரும் உக்களூர்;மால்வாய்;அரசூர்;நல்லூர் போன்ற கிராமங்களை முனிவருக்கு மானியமாக வழங்கி "இஸ்மதி சந்நியாசி" என்ற சிறப்புப் பட்டமும் அளித்துக் கௌரவித்தார்.
அத்துடன் சேதமடைந்த ஆலயங்களைத் திருத்த ;வேண்டிய பொருளுதவியும் செய்து, தன் பாட்டனார் பாவித்த தந்தப் பல்லக்கைப் புலவருக்குக் கானிக்கையாக்கினான்.அத்துடன் தன் நாட்டின் கௌரவ திவான் பதவியையும் அளித்து; பல்லக்கில் அரச மரியாதையுடன் உலாவர ஏற்பாடு செய்தான். ஆடம்பரம் விரும்பா முனிவர்; நண்பரின் மகிழ்ச்சிக்காக சில தடவை அப்பல்லக்கில் ஏறினாராம்.

ஆடம்பர வாழ்வில் ஆர்வமற்ற முனிவர், நாளும் ஏழை எளிய மக்களுடன் குடிசைகளில் தங்கி ,எவர் எதைக் கொடுத்தாலும் உண்டு. பனையோலைப் பாயில் படுத்து; மக்களோடு மக்களாக ,வட்டாரம் வட்டாரமாகச் சென்று ,பாரசீகம்;இந்துஸ்தானி மொழிகளைக்கற்று; எங்கே தமிழ் விழா நடந்தாலும் அழைப்பின்றிச் சென்ற தமிழ் யோகி "வீரமா முனிவர்" ,சிவந்த மேனியில் காவியும்;காதில் குண்டலமும்;நெற்றியில் சந்தணப் பொட்டும்,கையில் ராஜ ரிஷிகளின் சின்னமான கோடாரியும்;வெண்தலைப் பாகையும் ,சாந்தி தவளும் முகமாகவும் குடிசையிலே எளிமையாக தமிழகத்தில் 37 ஆண்டுகள் வாழ்ந்து ,கடைசிக் காலத்தில் அம்பலக்காட்டிலுள்ள தேவாலயத்தில் தங்கி அங்கேயே 04 - 02 - 1743ல் இறையடி எய்தினார்.

தமிழ் மண்ணில்,தமிழ்ப் பெயருடன்;தமிழ்ப் பண்பாட்டையேற்று, தமிழராக வாழ்ந்து ,தமிழன்னைக்குப் புகழ் சேர்த்த "வீரமா முனிவரை" நினைத்துப் போற்றுவோம்.
உள்னுழை
                  Thiratti.com Tamil Blog Aggregator
தேடல்
விழியம்